விடியலுக்குப் பின்பும்
இலையை ஒட்டியே பனித்துளி இருந்தது.
பின்பு கேட்ட
சிறு சலசலப்பிற்க்குப் பின்
பனியும் தொலைந்திருந்தது
இலையும் சிதைந்திருந்தது
குழந்தை ஒன்று அவ்வழியே சென்றிருந்தது;
நீர் பிடிக்க அம்மா அப்பாதையைக் கடந்திருந்தாள்;
வழிப்போக்கன் தடத்தைப் பதிந்திருந்தான்;
எவர் மீதோ கொண்ட கோபம்
எரிச்சலில் இலை மீதாக இருக்கலாம்;
சூரியனும் சுள்ளென்று விடியலில்.
ஏது என்றாலும்
அங்கு நிகழ்ந்திருந்தது
ஒரு நிகழ்வு
ஒரு இழப்பு
ஒரு மாற்றம்.
தொலைந்த பனித்துளி
பகடை விளையாட்டு
நான்
பகடை விளையாட்டிற்குப்
பழக்கப்பட்டவனில்லை;
வலுக்கொண்டு திணிக்கப்படுகின்றேன்.
இல்லை,
வலியச் சென்று ஆடுகின்றேன்.
தோற்றாலும்,
வென்றாலும்
முடிவின்றி தொடர்கிறது
என் பகடை விளையாட்டு.
சில நேரங்களில்
வேடிக்கைப் பார்ப்பவனாக;
சில கணங்களில்
ஆடுபவனாக;
மற்றும் சில பொழுதிலோ
பகடையாகவும் மாறிவிடுகின்றேன்.
பகடை ஆடும் கைகள்
சோர்வடைவதே இல்லை.
எண்கள் மாறி மாறி வருகின்றன;
என் யூகங்கள் தோற்கின்றன.
நான் விளையாட்டின் அடிமை போல் மாறிவிடுகின்றேன்.
ஒவ்வொரு எண்ணிற்கும்
கற்பனை முலாம் பூசப்படுகின்றது.
எண்கள் தமக்குள் சேர்ந்து
எண்ணங்களின் போக்கை மாற்றிவிடுகின்றன.
ஆடிக் களைத்தோ
ஆட்டம் கலைந்தோ
ஆட எவரும் இல்லாத
அன்றைய பொழுதின் உறக்கத்தில்
எண்கள் சிறகு முளைத்தனவாய்
என் தவறுகளை எள்ளி நகைக்கிறது.
என் தூக்கம் கணத்துவிடுகின்றது.
தொடுவானம்
தொடுவானத்தைப் போல நீ!
தூரமும் இல்லை.
பக்கமும் இல்லை.
இரண்டிற்கும் இடையில்
நான் ஏங்கிக் கிடக்கும்
ஒரு புள்ளியில்.
என்றேனும் வருவாய்
உனக்காக
25 முத்தங்களும்
கையளவு பொய்களும்
சேமித்து வைத்திருக்கிறேன்.
என்றேனும் வருவாய்;
ஒரு பார்வை பார்ப்பாய்;
சில வார்த்தை பேசுவாய் என்று.
தேவதையின் காதல்
நீ பேசும் பொழுதெல்லாம்
மௌனத்தை உடுத்திக் கொண்டாய்.
அழகானாய்.
உன் சாயலின்
ஒரு துளியை வாங்கி
எல்லா பெண்களும் அழகாகிவிட்டனர்.
உன் வார்த்தைகள்
உணர்வு தளங்களைத் தாண்டி
என்னை அழைத்துச் சென்றது.
நீ தேவதையானாய்.
உனது பிம்பங்களாகி
பெண்கள் எல்லாம் தேவதைகளானார்கள்.
நீ அவர்களின் இளவரசி.
இன்று,
ஒவ்வொரு விடியலும்
தீராத நமது காதலைப் பாடி
என்னைத் துயில் எழச் செய்கின்றது.
தொலைபேசுதல்
ஒரு கை பேசுகைக்கு
ஒரு கை துண்டிப்பானுக்கு
கண்களைத் தகவலுரைப் பெட்டிக்குமாய்
அவன் தொலைபேசுகிறான்.
கரையோர நந்தி
கரையோர நந்தியை
நுரைகள் மறைத்தால்
ஊரே மூழ்கிவிடும் என்று
அம்மா சொல்லிக் கேட்டதுண்டு.
கடைசி வெள்ளத்தில் கடனில் மூழ்கினோம்.
இன்று வரை எழுந்த பாடில்லை.
குழந்தை
அம்மாவின் டாக்டர் கனவையும்,
அப்பாவின் ஐஏஎஸ் கனவையும்
நெஞ்சில் கொண்டு
குழந்தை மட்டும் வளர்கிறது
தன் போக்கில்.
விதை நெல் நீ
என் வாழ்கையின்
விதை நெல் நீ!
உன்னைப் பிரிந்தாலும்
உன்னைச் சுற்றியே இருக்கும்
வாழ்க்கை எனக்கு
வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட
குடியானவன் போல.
பெயரிடல்
இனம் தெரியாத பறவைக்குப்
பெயரிடல் போல
உனக்கு பெயர்கள் இட்டு மகிழ்கிறேன்.
ஆனால் நீயோ
மௌனத்தைப் பேசி புன்னகைக்கிறாய்.
வார்த்தை விளையாட்டிற்கு
வாளெடுத்து வருகிறாய்.
விழி வாள் பட்டு
நான் வீழும் முன்
உன் பெயர் ஜபிக்க
முன்னால் கோபம் சொல்லி
பின்னால் சிரிப்பாய்.
உன் பெயரை
மூச்சிரைக்கச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பேன்.
நீயோ
'சும்மா இரேன்'
என்று சொல்ல
அட
என் பெயரும் இனிக்கிறேதே
என்று மயங்குவேன்.
வார்த்தைகளுடன் முட்டி மோதி
உனக்கென பெயர் தேடி
இரவெல்லாம் விழித்திருப்பேன்.
ஆனால் நீயோ
ஏது சொன்னாலும்
என் பெயராய்த் தோன்றும்.
'தேவை என்ன பெயரில்'
என்று கேட்கிறாய்.
உண்மை தானே.
தேவதைக்கு தேவை என்ன பெயரில்.
இருந்தாலும்
நான் அழைக்க
ஜபித்துச் சாக
வேண்டாமா சில பெயர்கள்....
புன்னகையின் நதியோட்டம்
என் வாழ்க்கையின்
வழி நெடுக ஓடிக்கொண்டிருக்கும்
புன்னகையின் நதியோட்டம் நீ.
நான் பூக்களை எறிந்தாலும்
முட்களைச் சொரிந்தாலும்
புன்னகைத்தே செல்கிறாய்.
நதியோடு கரையோரம்
மணலாடி நதி வியக்கும்
குழந்தை போல் நான்.